சென்னை பாரிமுனை பகுதியில் கோவிந்தப்பன் ஜங்ஷன் உள்ளது. இங்கு வீரபத்ரசுவாமி தேவஸ்தான கோவில் உள்ளது. இந்த கோவிலை இன்று காலை திறந்த அர்ச்சகர் வழக்கமான பூஜைகளை செய்துகொண்டிருந்தார். அப்போது, அந்த கோவிலுக்கு எதிரே கடை வைத்துள்ள முரளிகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்ய வந்தார்.
சாமி தரிசனம் செய்துகொண்டிருந்தபோது ‘நீ இதுவரை எனக்கு எதுவும் செய்யவில்லை’ என்று கடவுள் சிலையை பார்த்து கூச்சலிட்டார். பின்னர், தான் மறைத்துக்கொண்டுவந்த பீர்பாட்டிலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கோவிலுக்குள் வீசினார். இதனால், உடனடியாக அப்பகுதியில் தீப்பற்றியது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த கோவில் அர்ச்சகர் மற்றும் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பெட்ரோல் குண்டு வீசிய முரளிகிருஷ்ணனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முரளிகிருஷ்ணனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் அவர் சரித்திரப்பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது. மேலும், மதுபோதையில் இருந்த முரளிகிருஷ்ணன், சாமி தனக்கு எதுவும் செய்யாததால் கோவிலில் பெட்ரோல் குண்டு வீசியதாக கூறினார். கைது செய்யப்பட்ட முரளிகிருஷ்ணனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.