கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு. இவர் தனது இரண்டரை வயது மகளான மிலியை, காவேரிப்பட்டணம் ஜின்னா தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளார். நேற்று காவேரிப்பட்டணத்தில் ஆய்வுக்கு சென்ற கலெக்டர், தனது மகள் மிலி படித்து வரும் குழந்தைகள் நல மையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, குழந்தைகளின் வருகை பதிவேடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். பின்னர், குழந்தைகள் படிப்பதை பார்த்து ரசித்தார். தனது குழந்தை படிப்பதையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து குழந்தைகளுக்கு உணவு பரிமாறப்பட்டது. அங்கன்வாடி மைய பணியாளர்கள் உணவு ஊட்டினர். அப்போது தனது குழந்தைக்கு கலெக்டர் உணவு ஊட்டிவிட்டு, ஆய்வு பணியினை முடித்து கொண்டு புறப்பட முயன்றார். அப்போது கலெக்டரின் மகள் மிலி, தானும் அம்மாவுடன் வருவதாக கலெக்டரிடம் அடம் பிடித்து அழ துவங்கினாள். இதையடுத்து தனது குழந்தையை தூக்கி
கொண்டு கலெக்டர் தனது காருக்கு சென்றார். தொடர்ந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டார். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதுபற்றிய வீடியோ வைரலானது.