கரைவழியில் போலீசாரின் கெடுபிடி அதிகமாக உள்ளதால், கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தும் குற்றச்செயல்கள் நாகை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட கஞ்சா மூட்டைகள், விசைப்படகு மூலம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருப்பதாக நாகை தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து நாகை மாவட்டம் கீழையூர் மேலப்பிடாகை அருகே அதிரடி வாகன சோதனை மேற்கொண்ட எஸ்.ஐ பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார், இரு சொகுசு காரில் வந்த கஞ்சா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்தனர். அப்போது இரண்டு சொகுசு காரை சோதனை செய்ததில் அதில் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள 300 கிலோ கஞ்சா மூட்டைகள் கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இலங்கைக்கு படகுமூலம் கடத்தவிருந்த
மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள 300 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், கடத்தலில் ஈடுபட்ட திருச்சியை சேர்ந்த விக்னேஷ் வேதாரண்யம் மற்றும் விழுந்தமாவடியை சேர்ந்த கோபிநாத், வீரக்குமார், வீரமுரசு, முருகானந்தம், ஹரிகிருஷ்ணன், கோவையை சேர்ந்த சசிகுமார், தேனியை சேர்ந்த சுதர்சனம் ஆகிய எட்டு பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சா மூட்டைகளை சொகுசு காரில் தமிழகத்திற்கு கடத்தி வந்ததும், இதனை நாகை மாவட்டம் கோடியக்கரையில் இருந்து இலங்கைக்கு படகுமூலம் கடத்திச் செல்ல விருந்ததும் தனிப்படை போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசாரிடம் வசமாக சிக்கிய கடத்தல் காரர்கள் எட்டு பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு சொகுசு கார்களை போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.