கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு ஒன்றிய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது. இதன்படி 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. பணமதிப்பிழப்பு செய்யப்பட்டு 7 ஆண்டுகள் ஆகும்நிலையில் ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் மோசமாக வடிவமைக்கப்பட்ட ஜிஎஸ்டியும் நாட்டின் வேலைவாய்ப்பை உருவாக்கும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டது.
45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. 2013ம்ஆண்டு தொடங்கிய பொருளாதார மீட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. 7 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை திணித்தார். இது இந்திய பொருளாதாரத்தின் முதுகை உடைத்த ஒரு முடிவு. இதனை தொடர்ந்து 2020ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி திட்டமிடப்படாத ஊரடங்கு நடவடிக்கை மூலமாக மீண்டும் ஒரு கேலிக்கூத்து நிகழ்ந்தது. இதன் மூலமாக லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கான கி.மீ. தூரம் நடந்தே தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர். இந்த மாபெரும் பேரழிவை ஏற்படுத்திய பிரதமர் மோடியை இந்தியா ஒருபோதும் மன்னிக்காது” என்று குறிப்பிட்டுள்ளார்.