நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 39-வது லீக் போட்டி மும்பை – வான்கடே மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. 50 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்தது ஆப்கானிஸ்தான். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இப்ராகிம், 143 பந்துகளில் 129 ரன்கள் எடுத்திருந்தார். ரஷித் கான் 35 ரன்கள் எடுத்திருந்தார். ரஹ்மத் ஷா 30 ரன்கள், ஹஷ்மதுல்லா ஷாய்தி 26 ரன்கள், அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 22 ரன்கள் மற்றும் ரஹ்மனுல்லா குர்பாஸ் 21 ரன்கள் எடுத்திருந்தனர்.
292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலியா விரட்டியது. இரண்டாவது இன்னிங்ஸில் பனிப்பொழிவு இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. 91 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தடுமாறியது ஆஸ்திரேலியா. டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், ஜோஷ் இங்லிஸ், லபுஷேன், ஸ்டாய்னிஸ், ஸ்டார்க் ஆகியோர் ஆட்டமிழந்தனர்.
அந்த சூழலில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 201 ரன்கள் தேவைப்பட்டது. கையில் இருந்தது 3 விக்கெட்கள் மட்டுமே. எனவே ஆஸ்திரேலியா மூட்டையை கட்டவேண்டியது தான் என ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிா்பார்த்தனர். இதனால் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் பக்கமே ஆதரவு அலை திசைமாறி வீசியது.
இந்த நிலையில் தான் ஆடுகளத்தில் நங்கூரம் பாய்ச்சி, ஆஸி.க்கு நம்பிக்கை அளித்தாார் மேக்ஸ்வெல். மேக்ஸ்வெல் 100 ரன்கள் சேர்த்திருந்தபோது , அவரது காலில் தசை பிடிப்பு ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு டாக்டர் வந்து சிகிச்சை அளித்தார்.
அவரது நிலையை புரிந்து கொண்ட கேப்டன் கம்மின்ஸ், மேக்ஸ்வெல்லுக்கு ரிட்டயர்டு ஹர்ட் கொடுத்து வெளியேற்றிவிட்டு அடுத்த வீரரை இறக்க முடிவு செய்தார். அணியின் நிலைமை மோசமாக இருப்பதை அறிந்த மேக்ஸ்வெல் தன்னைத்தவிர யாரும் வெற்றியை பெற்றுத்தர முடியாது என்பதை உணர்ந்தவராக, நானே ஆடுகிறேன் என கூறி ஆட்டத்தை தொடர்ந்தார். அப்போது மேக்ஸ்வெல்லுக்கு பக்கபலமாக ஜோடி சேர்ந்து ஆடிய கேப்டன் கம்மின்ஸ், மேக்ஸ்வெல் மட்டுமே அடித்து ஆடட்டும் என அவர் போக்குக்கு ஆட்டத்தை கொடுத்தார்.
அவ்வப்போது ஒரு ரன் எடுக்கும் வாய்ப்பை தவிர்த்தார். கிடைக்கும் வாய்ப்புகளை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் பறக்க விட்டார் மேக்ஸ்வெல். மேக்ஸ்வெல்லின் தளராத நம்பிக்கை, சாதுரியமான ஆட்டத்தால் வெற்றிக்கனியை, ஆப்கானிஸ்தானிடம் இருந்து மெல்ல மெல்ல ஆஸ்திரேலியா பக்கம் திருப்பினார் மேக்ஸ்வெல். 46.5 ஓவர்களில் 128 பந்துகளில் 201 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற செய்தார் மேக்ஸ்வெல். 21 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார்.
மேக்ஸ்வெல் மற்றும் கேப்டன் கம்மின்ஸ் இருவரும் இணைந்து 8-வது விக்கெட்டுக்கு 202 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் மேக்ஸ்வெல்லின் பங்கு 179 ரன்கள். கம்மின்ஸின் பங்கு வெறும் 12 ரன்கள். இதற்காக அவர் 68 பந்துகளை எதிர்கொண்டு இருந்தார். இதில் ஒரு பவுண்டரியும் அடங்கும். களத்தில் 122 நிமிடங்கள் பேட் செய்திருந்தார். நூர் அகமது வீசிய 21.5-வது ஓவரில் மேக்ஸ்வெல் கொடுத்த கேட்ச் வாய்ப்பை மிஸ் செய்தார் முஜீப். ஆப்கன் அணியின் தோல்விக்கு இதுவும் முக்கிய காரணமாக அமைந்து விட்டது.
தனி ஒரு வீரராக ஆஸ்திரேலியாவை வெற்றிக்கு அழைத்துச்சென்ற மேக்ஸ்வெல்லின் அனைவி பெயர் வினி ராமன். சென்னையை பூர்வீகமாக கொண்டவர். வினியின் தந்தை ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் குடியேறினார். அங்கு அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. கடந்த ஆண்டு மார்ச்18ல் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. மார்ச் 27ல் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறான்.