Skip to content
Home » டைம் அவுட் முறையில் விக்கெட் இழந்த இலங்கை வீரர் கொந்தளிப்பு….

டைம் அவுட் முறையில் விக்கெட் இழந்த இலங்கை வீரர் கொந்தளிப்பு….

  • by Authour

உலகக் கோப்பை தொடரின் நேற்றைய ஆட்டத்தில் வங்கதேசமும் இலங்கை அணிகளும்  மோதின. இந்த ஆட்டத்தில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றிபெற்றது. ஆனால், இந்தப் போட்டியில் இலங்கை அணி வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அவுட் ஆக்கப்பட்ட விதம் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. காரணம், இலங்கை ஆட்டக்காரர் சதீரா சமரவிக்கிரமவின் விக்கெட்டினை இழந்ததும் 25-வது ஓவரில் களமிறங்கிய மேத்யூஸ் பேட்டிங் செய்ய தாமதமாக்கியதால் வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் நடுவர்களிடம் சென்று இதைத் தெரியப்படுத்தினார்.

மேலும், விடாமல் விக்கெட் கேட்டு முறையீடு செய்ய கள நடுவர்கள் சிறிது ஆலோசனைக்குப் பிறகு மேத்யூஸுக்கு டைம் அவுட் முறையில் அவுட் கொடுத்தனர். ஏஞ்சலோ மேத்யூஸ் தாமதத்துக்காக விளக்கமளித்தும் அதனை வங்கதேச அணியும், நடுவர்களும் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால், தன் விக்கெட்டைப் பறிகொடுத்த மேத்யூஸ் கடும் ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். அங்கும், ஆட்டம் முடியும் வரை சோகமாகவே அமர்ந்திருந்தார்.

இதனைக் கண்ட ரசிகர்கள், மேத்யூஸுக்கு ஆதரவாக தங்கள் கருத்தைக் கூறி உலகளவில் டிரெண்ட் செய்யத் துவங்கினர். காரணம், நடுவர்களின் முடிவு ஆட்ட விதிகளுக்கு உட்பட்டது தான் என்றாலும் விளையாட்டின் மாண்பிற்கு எதிரானது என விமர்சனங்கள் எழுந்தன. போட்டி முடிந்ததும் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஏஞ்சலோ மேத்யூஸ், “ இலங்கை அணிக்கான என் 15 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கையில் இன்று தரம் தாழ்ந்து நடந்துகொண்ட வங்கதேச அணியைப்போல் வேறு எந்த அணியையும் பார்த்ததில்லை.

ஷகிப் அல் ஹசன் மீது வைத்திருந்த மரியாதை போய்விட்டது. வங்கதேச வீரர்கள் அருவருவக்கத்தக்க வகையில் நடந்துகொண்டனர். நான் 2 நிமிடங்களுக்குள் மைதானத்திற்குள் வந்துவிட்டேன். அதற்கான ஆதாரத்தை வெளியிடுவேன்”  தற்போது, ஐசிசியிடம் தான் 5 வினாடிகளுக்கு முன்பே களத்திற்கு வந்துவிட்டதற்கான ஆதார விடியோவை மேத்யூஸ் அளித்துள்ளார்.

இந்த விமர்சனங்களுக்கு மத்தியில் வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன், ‘நான் செய்தது சரிதான்’ எனப் பதிலளித்திருப்பதுதான் ரசிகர்களை எரிச்சல் அடைய வைத்திருக்கிறது. ஷகிப் அல் ஹசன் *டைம் அவுட் விதி கூறுவது என்ன?* டைம் அவுட் விதியின்படி ஒரு வீரர் ஆட்டமிழந்த பிறகு அல்லது காயம் காரணமாக பெவிலியன் திரும்பும்போது களமிறங்க வரும் புதிய பேட்ஸ்மேன் 3 நிமிடங்களுக்குள் முதல் பந்தினை சந்தித்திருக்க வேண்டும். அப்படி இல்லையெனில், அந்த புதிய பேட்ஸ்மேன் டைம் அவுட் முறைப்படி ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்படுவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *