திருச்சியில் மாநகராட்சி கட்டடம் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள காளியம்மன் கோயில் தெரு பகுதியில், மாநகராட்சி மார்க்கெட் எதிரில் அப்பகுதியைச் சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடைய சிலர், நேற்று மாலை அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, கோட்டை பகுதியில் பெரிய ரௌடியாக என்ன செய்யலாம் என தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனராம். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவிலிருந்து பெட்ரோலை ஒரு பாட்டிலில் பிடித்து, அதை பெட்ரோல் குண்டாக மாற்றி, அதில் திரி போட்டு, தீ பற்றவைத்து மாநகராட்சி கட்டடத்தின் மீது அவர்கள் வீசினர்.
அது கட்டடத்தைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த தகரத்தின் மீது விழுந்து அது உடைந்து, அதிலிருந்த பெட்ரோல் தீப்பற்றி எரிந்துள்ளது. இதைப்பார்த்து அப்பகுதியிலிருந்த மக்கள் அலறியடித்து ஓடினர். பின்னர் அக்கம் பக்கத்தினர் தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இந்த களேபரத்தையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த கோட்டை போலீசார் அப்பகுதியில் விசாரணை நடத்தியதில், அதே பகுதியைச் சேர்ந்த சுபாஷ், அபிஷேக் உள்ளிடோர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.