அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தஞ்சாவூரான் சாவடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பிளாரன்ஸ் மேரி. கன்னியாஸ்திரியான இவருக்கு இசை மீது அதிக ஆர்வம் இருந்தது. இசைக்கலைஞராக வேண்டும் என ஆசைப்பட்டார். இதனால் திருச்சியில் உள்ள கன்னியாஸ்திரிகள் மடத்தில் தங்கி இருந்து திருச்சி கல்லூரியில் இசை பயின்று வந்தார். அப்போது திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் முதல்வராக இருந்த பாதிரியார் ராஜரத்தினம் என்பவர் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்து விட்டதாகவும் இதில் கருவுற்ற தனக்கு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வைத்து கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து கடந்த 2010ம் ஆண்டு கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜரத்தினம் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த 3 பாதிரியார்கள், பிளாரன்ஸ் மேரிக்கு கருக்கலைப்பு செய்த திருச்சி தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவர் ஆகியோரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த வழக்கின் முதல் எதிரியான பாதிரியார் ராஜரத்தினம் காலமானார். மற்ற மூன்று பாதிரியார்கள் மீதான குற்றச்சாட்டுகளை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துவிட்டது. தற்போது டாக்டர் மீதான குற்றச்சாட்டுக்கு மட்டும் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று வழக்கு விசாரணைக்காக பிளாரன்ஸ் மேரி திருச்சி கோர்ட்டில் ஆஜராகினார். மகிளா கோர்ட் நீதிபதி விசாரணையை வருகிற 27ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.