Skip to content
Home » சர்ச்சையை கிளப்பும் இஸ்ரோ தலைவரின் சுயசரிதை…. நிறுத்திவைப்பு

சர்ச்சையை கிளப்பும் இஸ்ரோ தலைவரின் சுயசரிதை…. நிறுத்திவைப்பு

  • by Authour

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன(ISRO) தலைவராக தமிழகத்தை சேர்ந்த சிவன்  பதவி வகித்தபோது நிலவுக்கு  சந்திரயான் 2 அனுப்பப்பட்டது. 22.7.2019ல் ஏவப்பட்ட இந்த விண்கலம்  வழித்தடம் மாறியதால்  6.9.2019ல் தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில்  சிவன் 2022 ஜனவரியில் ஓய்வு பெற்றார். அதைத்தொடர்ந்து கேரளாவை சேர்ந்த   சோம்நாத் இஸ்ரோ தலைவராக பதவி ஏற்றார்.  கடந்த 2023 ஜூலை 14ல்  சந்திரயான் 3  நிலவுக்கு  அனுப்பப்பட்டு  ஆகஸ்ட் 23ல் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்3  தரையிறங்கியது.

இந்த நிலையில்  இஸ்ரோ தலைவர் சோம்நாத்   நிலாவு குடித்த சிம்மங்கள் என்ற தலைப்பில்  மலையாளத்தில்  சுயசரிதை எழுதி உள்ளார். அதில்  பல இடங்களில் முன்னாள் தலைவர் சிவனை கடுமையாக தாக்கி உள்ளார் என புகார்கள் எழுந்தன.  சுயசரிதையில் அப்படி என்னதான் கூறி உள்ளார்.

தனது சுயசரிதை புத்தகத்தில் சோம்நாத் கூறியிருப்பதாவது: எனக்கும் சிவனுக்கும் 60 வயது நிறைவடைந்தவுடன் எங்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதன்படி கடந்த 2018ம் ஆண்டு இஸ்ரோ தலைவராக இருந்த ஏ.எஸ்.கிரண்குமார் ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு பிறகு எங்கள் இருவரின் பெயர்களும் இஸ்ரோ தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டது. இஸ்ரோ தலைவர் பதவி எனக்கு கிடைக்கும் என நான் நம்பியிருந்த நிலையில் அந்த பதவி சிவனுக்கு கொடுக்கப்பட்டது. இஸ்ரோ தலைவரான பிறகு சிவன், அதற்கு முன்பு வகித்து வந்த விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநர் பதவியை விட்டுக் கொடுக்கவில்லை.

விக்ரம் சாராபாய் பதவி குறித்து சிவனிடம் நான் கேட்டும் அவர் பதில் ஏதும் சொல்லாமல் மழுப்பிவிட்டார். அந்த விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் முன்னாள் இயக்குநர் டாக்டர் பி.என். சுரேஷின் தலையீட்டை அடுத்து 6 மாதங்கள் கழித்து அந்த பதவிக்கு நான் நியமிக்கப்பட்டேன். இஸ்ரோ தலைவராக 3 ஆண்டுகள் சேவைகளை செய்துவிட்டு ஓய்வு எடுப்பதற்கு பதிலாக சிவன் தனது பதவியை நீட்டிக்கவே முயற்சித்தார்.

என்னை தலைவராக்கக் கூடாது என்பதற்காகவே விண்வெளி ஆணையத்தில் யாரை தலைவராக்குவது என்ற ஆலோசனைக்கு யு.ஆர். ராவ் விண்வெளி மையத்தின் இயக்குநரை விட்டு தேர்வு செய்தார்கள் என நான் கருதுகிறேன். இதைத் தொடர்ந்து சந்திரயான் 2 நிலவில் செலுத்திய போது பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க என்னை அழைத்து செல்லாமல் ஒதுக்கியே வைத்தனர்” என பல்வேறு பரபரப்பு தகவல்கள் இடம் பெற்று இருந்தன.

இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவனை டார்கெட் செய்து இடம் பெற்று இருந்த கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிடுவதை நிறுத்திவைப்பதாக சோம்நாத் கூறியுள்ளார். இது தொடர்பாக சோம்நாத் கூறுகையில், ” நான் இன்னும் எனது சுயசரிதை புத்தகத்தை வெளியிடவில்லை. புத்தக வெளியீட்டாளர்கள் இந்த புத்தகத்தின் சில காப்பிகளை வெளியிட்டு இருக்கலாம் என கருதுகிறேன்.

புத்தகத்தை வெளியிடுவதை நிறுத்தி வைக்குமாறு நான் கூறியுள்ளேன். இந்த புத்தகத்தை வெளியிடலாமா வேண்டாமா என்பது குறித்து பிறகு முடிவு செய்வேன். இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இருக்கும் என்ற நோக்கத்தில் தான் புத்தகத்தை எழுதினேனே தவிர யாரையும் டார்கெட் செய்து எழுதவில்லை. கே.சிவனை இது மிகவும் காயப்படுத்தி இருக்கும் என்பதால்  எனக்கு வருத்தம் அளிக்கிறது. ஒரு தலைவராக அவர் முன் பல விருப்பங்கள் இருந்து இருக்கும். அவரது அதிகாரத்தை நான் ஒருபோதும் கேள்வி எழுப்பவில்லை. எனது வருத்தம் குறித்த கேள்வி மட்டுமே இருந்ததே தவிர வேறு எந்த நோக்கமும் கிடையாது” என்று கூறியுள்ளார்.

இது குறித்து  சிவனிடம் பதில் பெற முயன்றபோது அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.

சோம்நாத் எப்போதும் சிவன் மேல் கோபத்துடனேயே இருந்துள்ளார் என்று அவரைபற்றி அறிந்த பலர் கருத்து தெரிவித்து உள்ளனர். சந்திரயான் 3 நிலவில் இறங்கியதும் சோம்நாத் அளித்த பேட்டியில் பல முன்னாள் தலைவர்களுக்கு நன்றி சொன்னபோது அவர் அருகில் இருந்த சிவன் பெயரை குறிப்பிடவில்லை என்றும் கூறப்படுகிறது.  இப்போது சுயசரிதை பிரச்னை ஏற்படுத்தி விட்டதால் அதனை அவர் வெளியிடுவதை நிறுத்தி வைத்து உள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *