நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற புதுபேட்டை பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் செந்தில்குமார், சிவகுமார், மதன், நித்திகுமார்
உள்ளிட்ட 4 பேரும் கோடியக்கரைக்கு தென்கிழக்கு 10 கடல் மைல் தொலைவில் நேற்று அதிகாலை மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அதிவேக பைபர்படகில் இந்திய எல்லைக்குள் நுழைந்த தமிழ் பேசக்கூடிய 3 இலங்கை கடற்கொள்ளையர்கள் புதுபேட்டை மீனவர்கள் 4 பேரையும் கத்தி, உள்ளிட்ட கடுமையான ஆயுதங்களால் தாக்கி, வலை, ஜி.பி.எஸ் கருவி, செல்போன், உள்ளிட்ட 1லட்சம் பொருட்களை கொள்ளையடித்து கொண்டு விரட்டி அடித்துள்ளனர்.
தலையில் வெட்டு காயம் அடைந்த செந்தில்குமார், வலது காலில் காயம் அடைந்த மீனவர்கள் 2 பேர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதே போல் வேதாரண்யம் அடுத்த வானவன்மகாதேவி பகுதியில் சிதம்பரம் என்பவருக்கு சொந்தமான படையில் மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்களையும் 3 இலங்கை கடற்கொள்ளையர்கள் வழிமறித்து மீன்பிடி உபகரணங்களை பறித்துக் கொண்டு தாக்கி விரட்டி அடித்துள்ளனர் இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று புகார் அளித்துள்ளனர்.
இந்த இரண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் அடையாளம் தெரியாத இலங்கை கடல் கொள்ளையர்கள் 6 பேர் மீது வழிப்பறி மற்றும் பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்து வருகின்றன.