கரூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே மேலமாயனூர், கீழ மாயனூர், ரங்கநாதபுரம், கட்டளை ஆகிய பகுதிகளில் சுமார் 750 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றன.
இந்த பகுதியானது அமராவதி ஆற்றுப் பாசனத்தின் கடை மடை பகுதியாக உள்ளது.
தற்போது இந்தப் பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்துள்ளது. மாயனூர் பகுதிகளில் நேற்று 42 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
நேற்று பெய்த கன மழையால் மேல மாயனூர், கீழமாயனூர், கட்டளை, ரெங்கநாதபுரம் பகுதியில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.
மேலும் இந்த பாதிப்பிற்கு அமராவதி கடைமடையின் வடிகால் ஓடை சரிவர தூர்வாரப்படாமல் இருப்பதே காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஓடையினை தூர்வார அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், அவர்களின் அலட்சியப் போக்கே இதற்கு காரணம் எனவும், ஒரு ஏக்கருக்கு நடவு கூலி, உரம் மற்றும் களையெடுத்தல் ஆகியவற்றிற்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் முதல் 35ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்வதாகவும், தற்போது இந்த பகுதியில் 4,12, 20 நாட்களில் நடப்பட்ட நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளதாகவும், தொடர்ந்து இரண்டு நாட்கள் மழை நீர் வடியாமல் இருந்தால் நெற்ப்பயிர்கள் அனைத்தும் அழுகிவிடும் எனவும் இதனால் தங்களுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். வடிகால் பாதைகளை சர்வே எடுத்து அதிகாரிகள் சரியான முறையில் தூர்வாரி தங்களுக்கு விவசாய நிலங்களில் மழைநீர் வடியாமல் இருக்க ஏற்பாடு செய்து தர வேண்டும் எனவும், தமிழக அரசு தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.