வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கும் வகையிலும், 18 வயது நிரம்பிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட கலெக்டர் க.கற்பகம் தலைமையில் இன்று (03.11.2023) தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூட்ட அரங்கில் நடைபெற்றது. 2000க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:*
பெரம்பலூர் மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி, 147. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்கு சாவடிகளில் மொத்தம் 2,94,314 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,43,585 ஆண் வாக்காளர்களும், 1,50,721 பெண் வாக்காளர்களும், 8 இதர வாக்காளர்களும் உள்ளனர். 148. குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 320 வாக்கு சாவடிகளில் மொத்தம் 2,68,185 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,32,906 ஆண் வாக்காளர்களும், 1,35,279 பெண் வாக்காளர்களும், உள்ளனர்.
எதிர்கால இந்தியாவின் தூண்களாக விளங்கும் மாணவ மாணவிகளில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதை உங்களுக்கு உணர்த்துவதே இக்கூட்டத்தின் நோக்கம். தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கல்லூரிகளின் மூலம் முதற்கட்டமாக 2000 மாணவ மாணவிகளை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. விலைமதிப்பற்றது நம் ஒவ்வொருவரின் வாக்குரிமை. வாக்களிப்பது நமது ஜனநாயகக் கடமை. எனவே. 18 வயது பூர்த்தியடைந்த மாணவ மாணவிகள் அனைவரும் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என இவ்வாறு தெரிவித்தார்.
முன்னாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, முகவரி மாற்றம் உள்ளிட்ட செயல்பாடுகளை மொபைல் செயலியில் எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்த காணொளிக் காட்சி மூலம் அனைவருக்கும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், நிகழ்விடத்திலேயே மாணவ மாணவிகளுக்கு தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர்(பொ) சத்திய பாலகங்காதரன், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் செயலர் நீல்ராஜ், திட்டம் மற்றும் செயலாக்க அலுவலர் நந்தகுமார், பல்கலைக்கழக கூடுதல் பதிவாளர் முனைவர் இளங்கோவன், பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் அருளானந்தம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.