திருச்சியைச் சேர்ந்த திமுக எம்பி சிவாவின் மகன் சூர்யா. இவர் பாஜகவில் மாநில பொதுச்செயலாராக இருந்தார். இவரும் தமிழக பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி இருவரும் செல்போனில் பேசியபோது கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதனையடுத்து, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ள சூர்யா சிவா கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாதத்துக்கு நீக்கப்படுவதாக கடந்த ஆண்டு நவம்பர் 24-ம் தேதி அண்ணாமலை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சூர்யா சிவா அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில்சேரப் போவதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சூர்யா சிவா கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டதால், ஒழுங்கு நடவடிக்கை குழுவானது விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்ததன் அடிப்படையில் 24.11.2022 முதல் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாத காலத்துக்கு நீக்கம் செய்யப்பட்டிருந்தார். அவருடைய வேண்டுகோளுக்கிணங்க சூர்யா சிவா, தான் வகித்து வந்த பதவியில் மீண்டும் தெடருமாறு அறிவுறுத்தப்படுகிறார் என தெரிவித்துள்ளார். சூர்யா சிவா அதிமுகவிற்கு செல்லப்போவதான வெளியான தகவல்களின் அடிப்படையில் பாஜக அவசர அவசரமாக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. இதன் எதிரொலியாக பீனிக்ஸ் பறவையானேன் என சூர்யாசிவா தனது எக்ஸ் பக்கத்தில் மீண்டும் பாஜவில் இணைந்ததற்கு மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார்….