தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டியில் கோழிக்கழிவுகளுக்கு மத்தியில் ஆதரவின்றி மிகவும் மோசமான நிலையில் கிடந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவரை போலீசார் மீட்டு முதலுதவி அளித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மனிதாபிமானம் மரித்து போகவில்லை என்பதற்கு இந்த நிகழ்வு சாட்சியாக உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் தனியார் கம்பெனி அருகே பாலத்தின் அடியில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ஆதரவின்றி மிகவும் மோசமான நிலையில் கோழி கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில்
அனாதரவாக கிடந்துள்ளார். அப்போது அந்த வழியாக செங்கிப்பட்டி ஏட்டு ராஜகோபால் மற்றும் போலீசார் சிவலிங்கம், மோகன்ராஜ் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கோழி கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் கிடந்த அந்த முதியவரை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து கோழிக்கழிவுகளில் இருந்து அந்த முதியவரை மீட்டு அவரை குளிக்க வைத்து, ஆடைகள் அணிவித்தனர். தொடர்ந்து அந்த முதியவருக்கு உணவு வழங்கி தேவையான மருத்துவ முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் அளித்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆதரவின்றி கிடந்த முதியவருக்கு செங்கிப்பட்டி போலீசார் முதலுதவி அளித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெகு வேகமாக பரவி வருகிறது. மனிதாபிமானம் இன்னும் மரித்து போகவில்லை என்பதற்கு சாட்சியாகவும், போலீசார் பொதுமக்களின் நண்பன் என்பதை உணர்த்தும் விதமாகவும் நடந்து கொண்ட செங்கிப்பட்டி போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.