தஞ்சை மாவட்டத்தில் பஸ்களில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பப்படுகிறது. மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகள், மருத்துவமனை நிறைந்த பகுதிகளில் அதிக சத்தத்துடன் ஏர்ஹாரனை ஒலிக்கவிட்டு மக்களை அச்சுறுத்தும் வகையில பஸ்கள் இயக்கப்படுகிறது என்று தொடர்ந்து பொதுமக்கள் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு புகார்கள் தெரிவித்து வந்தனர்.
முக்கியமாக தஞ்சை பழைய பஸ்ஸ்டாண்ட் பகுதி, சோழன்சிலை, மேம்பாலம் பகுதி ஆகியவற்றி அதிவிரைவாக பஸ்களை இயக்கி ஏர்ஹாரன்களை ஒலிக்கவிடுகின்றனர். இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அச்சப்பட்டு நிலைதடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர் என்றும் புகார்கள் எழுந்தது.
இதையடுத்து இதுபோன்று அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலிக்க விட்டும், ஏர்ஹாரன்கள் பயன்படுத்தும் பஸ்கள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத்துறை ஆணையர் சண்முகசுந்தரம், மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் ஆகியோர் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
இதன்பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த் மற்றும் அதிகாரிகள் தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கலெக்டர் அலுவலகம் அருகேயும், தஞ்சை-பட்டுக்கோட்டை சாலையில் பைபாஸ் அருகேயும் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சென்ற அரசு மற்றும் தனியார் பஸ்கள், வாகனங்களை நிறுத்தி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதிக ஒலி எழுப்பக்கூடிய வகையில் ஏர்ஹாரன்கள் பயன்படுத்தியதற்காகவும், அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலிபரப்பியதற்காகவும் 15 பஸ்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. மேலும் இது தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
மேலும் தஞ்சை மாவட்டத்தில் இது போன்ற சோதனைகள் அடிக்கடி மேற்கொள்ளப்படும். அப்போது அதிக சத்தம் எழுப்பும் ஏர்ஹாரன்கள் மற்றும் அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலிபரப்புவது தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், அதிக சத்தத்துடன் ஏர்ஹாரன்களை அடிப்பது தற்போது பேஷன் என்று டிரைவர்கள் நினைத்து கொள்கின்றனர். மேலும் ஏர்ஹாரன்களை விதவிதமாக ஒலியெழுப்பி மிரள செய்கின்றனர். வயதானவர்கள் டூவிலரில் செல்லும் போது மிரண்டு தடுமாறி விழுகின்றனர். மேலும் தஞ்சை பழைய பஸ்ஸ்டாண்ட் பகுதியில் அரசு மருத்துவமனை உள்ளது. இதில் பிரசவித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளனர். இப்பகுதியிலும் இதுபோன்று அதிக சத்தத்துடன் ஏர்ஹாரன்களை ஒலிக்க செய்கின்றனர். இப்பகுதியிலும் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்ய வேண்டும்.