தஞ்சை அருகே வல்லம் பெரியார் நகர் கல்லறைத் தோட்டத்தில் நேற்று கிறிஸ்தவர்கள் தங்களின் முன்னோர்களை நினைவு கூர்ந்து வழிபாடு நடத்தினர்.
ஆண்டுதோறும் நவம்பர் 2-ம் நாள் இறந்தவர்களை நினைவு கூறும் கல்லறைத் திருநாளாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர்.
அன்று தங்கள் குடும்பத்தினருடன் தேவாலயங்களுக்குச் சென்று திருப்பலி, சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர். பின்னர் அவரவர் முன்னோர்களின் குடும்ப கல்லறைகளுக்குச் சென்று அங்கு மலர்களால் அலங்கரிப்பர். பின்னர் மெழுவர்த்தி ஏற்றி முன்னோர்களையும், குடும்பத்தில் இறந்தவர்களையும் நினைத்து வழிபடுவது வழக்கம்.
அந்த வகையில் நேற்று வல்லம் பெரியார் நகர் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் திரளான கிறிஸ்தவர்கள் கல்லறைத் திருநாளை கடைப்பிடித்தனர். அப்பகுதியில் இருந்த கல்லறைகள் சுத்தம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு மெழுகுவர்த்தி ஏற்றி தங்களின் முன்னோர்களை நினைத்து குடும்பம், குடும்பமாக வந்து வழிபாடு நடத்தினர்.