Skip to content
Home » கடலூரில் அஞ்சலை அம்மாள் திருவுருவ சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

கடலூரில் அஞ்சலை அம்மாள் திருவுருவ சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (2.11.2023) தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கடலூர் மாநகராட்சி, காந்தி பூங்காவில் நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் அவர்களின் திருவுருவச் சிலையை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தமிழகத்தின் புகழ்சால் பெருந்தகையாளர்கள், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு தமிழ்நாட்டிற்குப் பெருமைத் தேடித்தந்த அறிஞர் பெருமக்கள், சமூகநீதி, விடுதலை உணர்வுகளை ஊட்டிவளர்த்த கவிஞர்கள், இசை மேதைகள், தமிழ்நாட்டின் தியாக வரலாற்றுக்கு உன்னத சாட்சியங்களாக விளங்கும் தியாகிகள், மேதைகள் மற்றும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையிலும், தமிழ் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையிலும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நினைவகங்கள், திருவுருவச் சிலைகள், அரங்கங்கள், நினைவுத் தூண்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு, சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

tn

அஞ்சலை அம்மாள் அவர்கள் சிறுவயது முதல் சுதந்திரப் பற்று மிக்கவராக திகழ்ந்தார். 1921 ஆம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கிய போது அதில் கலந்து கொண்டு அஞ்சலை அம்மாள் தமது பொது வாழ்க்கையை தொடங்கினார். சென்னையில் நடைபெற்ற ஆங்கிலேய படைத் தளபதி ஜேம்ஸ் நீல் சிலை அகற்றும் போராட்டம், கடலூரில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகம் மற்றும் அந்நிய ஆடை எதிர்ப்பு போராட்டம், 1940 ஆம் ஆண்டு நடைபெற்ற தனிநபர் சத்தியாகிரக போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றதற்காக சிறை தண்டனை பெற்றார்.

அஞ்சலையம்மாள் விடுதலைப் போராட்டத்திற்காக தனது குடும்பச் சொத்துக்களையும், குடியிருந்த வீட்டையும் விற்று, நாட்டிற்காக தியாகம் செய்தார். “தென்னாட்டின் ஜான்சி ராணி” என்று மகாத்மா காந்தியடிகளால் அழைக்கப்பட்ட அஞ்சலையம்மாள் அவர்கள், மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றியவர்.இத்தகைய சிறப்புமிக்க சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாள் அவர்களின் நினைவைப் போற்றுகின்ற வகையில், 2021-22ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக்கோரிக்கையில், இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி, ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றத் தென்னிந்தியாவின் முதல் பெண்மணி, அண்ணல் காந்தியடிகளால் தென்னிந்தியாவின் ஜான்சிராணி என்று அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் அவர்களுக்குக் கடலூரில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பிற்கிணங்க, கடலூர் மாநகராட்சி, காந்தி பூங்காவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் அவர்களின் திருவுருவச் சிலையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!