நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள எஸ்டேட்டின் உரிமையாளர் தொழிலதிபர் சிவகுமார். இவர் தனது எஸ்டேட்டில் பணிபுரியும் 15 ஊழியர்களுக்கும் ஆளுக்கு ஒரு ராயல் என்ஃபீல்டு புல்லட் ஒன்றை இந்தத் தீபாவளி போனஸாக வழங்கி அசத்தியிருக்கிறார். அட, இதில் டிரைவர் முதற்கொண்டு மேனேஜர் வரை எல்லோருக்குமே டூவீலர்களை
போனஸாக வழங்கியிருக்கிறார் என்பதுதான் அவரது செயலுக்கு ‘வாவ்’ சொல்ல வைக்கிறது.
திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் சிவகுமார், கோத்தகிரி பகுதிகளில் கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலை காய்கறி மற்றும் கொய்மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார். தனது நிறுவனத்தில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சமயங்களில் சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்து அசத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.
தனது கார் டிரைவர் முதல் எஸ்டேட் மேனேஜர் வரை 15 பணியாளர்களைத் தேர்வு செய்திருக்கிறார். மேலும் அவர்கள் விரும்பும் வாகனங்களை அறிந்துகொண்டு, ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் – 1, ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 350 – 4 , ராயல் என்ஃபீல்டு ஹன்ட்டர் 350 – 7, யமஹா ரே ஸ்கூட்டர் – 3 என 15 வாகனங்களை புக் செய்திருக்கிறார். 15 பேரையும் அழைத்து, வாகனத்தின் சாவியைக் கையில் கொடுத்திருக்கிறார். சற்றும் எதிர்பாராத பணியாளர் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள்.
‘தீபாவளிக்கு போனஸ் எப்போடா வரும்’ என்று மொபைல் போனில் குறுஞ்செய்தி வருதா என்று பார்க்கிற சீசன் இது.
ஆனால், ஊட்டியில் அருகேயுள்ள உள்ள எஸ்டேட்டில் அதன் ஊழியர்களுக்கு வெயிட்டாக ஒரு போனஸ் பரிசை வழங்கியிருக்கிறார் அந்த எஸ்டேட் உரிமையாளர்.