தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் அல்ல, உலகம் முழுவதிலும் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களையே டெங்கு காய்ச்சல் அதிகமாக தாக்குகிறது என்ற அதிர்ச்சி தகவல் முதல்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் டெங்கு பாதிப்பு யாருக்கு அதிகம் ஏற்படுகிறது என்று சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டன.
இந்த ஆய்வு முடிவுகளின்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களிடம் டெங்கு பாதிப்பு அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதேபோல் அமெரிக்கன் சொசைட்டி ஆப் டிராபிக்கல் மெடிசின் மற்றும் ஹைஜின் வெளியிட்ட ஆய்வின்படி 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று முதல் அலையின்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கொரோனா பாதிக்காதவர்களை விட டெங்கு தாக்குவதற்கான வாய்ப்பு 2 மடங்கு அதிகம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கும் டெங்கு அதிக விகிதத்தில் தாக்கி இருப்பதை கண்டறிந்தனர். மேலும் ஆய்வகத்தில் ஆய்வு செய்ததில் கொரோனாவுக்கு எதிராக உருவாக்கப்படும் தடுப்பு மருந்துகள் முன்னிலையில், ஆய்வக செல்களை டெங்கு வைரஸ் எளிதில் தாக்கியதும் தெரிய வந்தது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிர்காலத்தில் டெங்கு பரவல் வாய்ப்பு அதிகம் என்று முதல்கட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு உலகம் முழுவதுமே டெங்கு பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. இது 2017-ம் ஆண்டுக்கு பிறகு மிகப்பெரிய பாதிப்பு என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.