திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள தாயனூர் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சக்திவேல் இவரது மகன் லோகநாதன் (23) பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவர் அல்லித்துறை உய்யக்கொண்டான் பாலம் அருகே உள்ள மீன் கடையில் மீன் வாங்குவதற்காக வந்துள்ளார்.
அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த தாயனூர், மேலக்காடு பகுதியைச் சார்ந்த செல்வம் என்பவரது மகன் விக்னேஷ் (21) தாயனூர் காமராஜர் பகுதியைச் சார்ந்த விஜயகுமார் என்பவரது மகன் அபினேஷ் (22) ஆகிய இருவரும் லோகநாதனிடம் மது குடிக்க பணம் வேண்டும் என்று கேட்டுள்ளனர். அவர் தர மறுக்கவே தாங்கள் கையில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை காட்டி சுட்டு விடுவேன் என மிரட்டியும், ஆபாச வார்த்தைகளால் திட்டியும் அவர் சட்டை பையில் இருந்த ரூபாய் 1000 எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்ப முயன்றனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை பிடிக்க முற்பட்டபோது அவர்களையும் துப்பாக்கியை காட்டி சுட்டு விடுவேன் என்று மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் லோகநாதன் அளித்த புகாரின் பேரில் விக்னேஷ் மற்றும் அபினேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து நாட்டு துப்பாக்கி மற்றும் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.