கேரளாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததை தொடர்ந்தும், தமிழ்நாட்டின் பாதுகாப்பினை பலப்படுத்தும் நோக்கத்திலும் தமிழ்நாடு முழுவதும் பழைய குற்றவாளிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் இன்று திருச்சி, கடலூர், நெல்லை, தூத்துக்குடி உள்பட பல்வேறு நகரங்களில் இன்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். திருச்சி மாநகரில் போலீஸ் கமிஷனர் காமினி அறிவுரையின்பேரில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் அந்தந்த பகுதிகளில் போலீசார் ரவுடிகளின் வீடுகளில் அதிரடி ரெய்டு நடத்தினர். மாநகரில் உள்ள 14 போலீஸ் நிலைய பகுதிகளிலும் இந்த சோதனை நடந்தது. காலை 6 மணிக்கே இந்த சோதனை தொடங்கியது.இன்று மாலை வரை சோதனை நடைபெறும் என தெரிகிறது.
கொடுக்கப்பட்ட முகவரிகளில் பழைய குற்றவாளிகள் இருக்கிறார்களா, தற்போது தொழில் எதுவும் செய்கிறார்களா, வேலைக்கு செல்கிறார்களா, வருமானத்துக்கு என்ன செய்கிறார்கள். அடிக்கடி தலைமறைவாகி
விடுகிறார்களா, அப்படியானால் அவர்கள் எங்கே போகிறார்கள். இவர்களது வீட்டுக்கு மர்ம நபர்கள் யாரும் வருகிறார்களா என்பன போன்ற பல கேள்விகளை கேட்டு சோதனை நடத்தினர்.
சம்பந்தப்பட்டவரின் வீட்டில் உள்ளவர்களிடம் மட்டும் அல்லாது அந்த பகுதியில் உள்ள மற்றவர்களிடமும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். வீடுகளில் ஆயுதங்கள், வெடிப்பொருட்கள், போதைபொருட்கள் எதுவும் பதுக்கி வைத்திருக்கிறார்களா என்றும் துருவி துருவி சோதனை நடத்தினர்.
தொடர்ந்து அவர்கள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது தெரியவந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் கமிஷனர் காமினி கூறினார்.