இந்திய நாட்டின் முதல் துணைப் பிரதமரான வல்லபாய்படேல் அவர்களின் பிறந்த தினமான அக்டோபர் 31ஆம் நாள் தேசிய ஒற்றுமை நாளாக அனுசரிக்கப்படுகிறது.
அதன் அடிப்படையில் இன்று (31.10.2023) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியாக “இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும் இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமார உறுதியளிக்கிறேன். சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்குப் பார்வையாலும், நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன். எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன்” என மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் வாசிக்க அனைத்துத்துறை அலுவலர்களும் அவரைத் தொடர்ந்து உறுதிமொழி ஏற்று கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, வருவாய் கோட்டாட்சியர்(பொ) சத்தியபால கங்காதரன், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் சிவா, குற்றவியல் மேலாளர் பாரதிவளவன் மற்றும் அனைத்து துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.