பெரம்பலூர் மாவட்டத்தில் 31 இடங்களில் கல் குவாரிகள் நடத்த டெண்டர் கோரப்பட்டு இருந்தது. டெண்டருக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். டெண்டர் விண்ணப்பங்கள் பெறுவதற்கான மூடி முத்திரையிடப்பட்டிருந்த பெட்டி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சுரங்கத்துறை உதவி இயக்குனர் ஜெயபால் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இன்று கடைசி நாள் என்பதால் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, விசிக என அனைத்து கட்சிகளையும் சேர்ந்தவர்கள் விண்ணப்பங்களுடன் வந்திருந்தனர். அப்போது ஆளுங்கட்சிக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என அங்கிருந்தவர்கள் திடீரென கோஷம் போட, மாற்றுக்கட்சியினர் ஒன்று திரண்டு எதிர்கோஷம் போட்டனர்.
இதனால் டெண்டர் மனு போட வந்தவர்கள் 2 கோஷ்டிகளாக பிரிந்து கோஷம் போட்டனர். கோஷம் முற்றிய நிலையில் தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர். திடீரென டெண்டர் மனுக்கள் பெற வைக்கப்பட்டிருந்த பெட்டியை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். அதற்குள் அங்கிருந்த அனைவரும் கலைந்து சென்று விட்டனர்.
உடைக்கப்பட்ட பெட்டி இருந்த அறையை அதிகாரிகள் அதிரடியாக மூடினா். இது குறித்து கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள அறிக்கையில், நிர்வாக காரணங்களால் பெரம்பலூர் மாவட்ட கனிமவள குவாரிகள் ஏலம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.