கரூர் மாவட்டம், கொடையூர் அடுத்த அரசம்பாளையத்தில் உள்ள விவசாயி ஒருவரின் முருங்கைத் தோட்டத்தில் சிவலிங்கம் ஒன்று மண்ணில் புதைந்த நிலையில் இருந்த தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற சிவனடியார்கள், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மூடியிருந்த மணல் மேட்டை அப்புறப்படுத்தி 8 அடி உயர சிவலிங்கம் மற்றும் நந்தி சிலையை கண்டுபிடித்து, பூஜைகள் செய்தனர். அந்த சிவலிங்கம் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கூறப்படுகிறது.
திருமேனி மேற்கு பார்த்த சிவலிங்கம் தமிழகத்தில் மிகப்பெரிய கோயிலாக மூன்று இடங்களில் உள்ளது. இங்கு உள்ள ஆவுடையார் தமிழகத்திலேயே மிகப்பெரிய அளவில் இங்குதான் உள்ளது.
இந்நிலையில் இன்று ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு பழமை வாய்ந்த அந்த 8 அடி உயர சிவலிங்கத்தை சுற்றி ஆவுடையாரை பிரதிஷ்டை செய்தனர். தொடர்ந்து எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம், விபூதி மற்றும் பன்னீர் உள்ளிட்ட வாசனை
திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தி, தோல்
கருவிகள் மற்றும் சங்கொலி முழங்க சிவனடியார்கள் கூடி தமிழ் முறைப்படி வழிபாடு நடத்தினர்.
தொடர்ந்து 7 அடி உயரம் கொண்ட சிவலிங்கத்திற்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறி மகா தீபாராதனை நடைபெற்றது.
பழமை வாய்ந்த சிவலிங்கத்திற்கு தமிழ் முறைப்படி சிவ தொண்டர்கள் அபிஷேகம் செய்த காட்சியைக் காண கரூர், நாமக்கல், வேலூர் திண்டுக்கல், ஈரோடு, கோயமுத்தூர், திருப்பூர் உள்ளிட்ட அண்டை மாவட்டத்தில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் நான்கு சக்கர வாகனம் மூலமாக வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.