Skip to content
Home » பாசி நிதி நிறுவன மோசடி வழக்கு…ஐ.ஜி பிரமோத்குமார் 4ம் தேதி ஆஜராக உத்தரவு

பாசி நிதி நிறுவன மோசடி வழக்கு…ஐ.ஜி பிரமோத்குமார் 4ம் தேதி ஆஜராக உத்தரவு

திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த பாசி பாரக்ஸ் டிரேடிங் என்ற நிதி நிறுவனம் முதலீட்டுக்கு அதிக வட்டி அளிப்பதாகக் கூறி முதலீடு செய்தவர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி பணத்தை திரும்பி தராமல் 58,571 பேரிடம் ரூ.930.71 கோடி மோசடி செய்துள்ளது.

இந்த மோசடி வழக்கில் இருந்து பாசி நிதி நிறுவன இயக்குநர்களை காப்பாற்றுவதற்காக ரூ.2.50 கோடி லஞ்சமாக பெற்றதாக அப்போதைய மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி பிரமோத்குமார், அப்போதைய சிபிசிஐடி டிஎஸ்பி ராஜேந்திரன், காவல் ஆய்வாளர் மோகன்ராஜ், திருநெல்வேலியைச் சேர்ந்த ஜான் பிரபாகரன், திருப்பூரைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகியோர் மீது சிபிஐ தனியே வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் கடந்த 2013-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டும் 10 ஆண்டுகளாக குற்றச்சாட்டு பதிவு செய்யபடாமல் இருந்து வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றசாட்டு பதிவு செய்ய வேண்டும் என கோவை சிபிஐ நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து 2 முறை குற்றம்சாட்டவர்களில் பிரோத்குமார் தவிர மற்ற 4 பேரும் ஆஜராகினர்.பிரமோத்குமார் ஆஜர் ஆகாமல் கால அவகாசம் கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி தற்போது கரூரில் உள்ள செய்திதாள் காகித நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக உள்ள ஐஜி பிரோத்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னையில் உள்ள சிபிஐ பொருளாதார குற்றப்பிரிவு டிஐஜி-க்கு உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து ஐஜி பிரமோத் குமார் இன்று காலை கோவை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரானார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிடிவாரண்டை தள்ளுபடி செய்து உள்ளார்.இந்த வழக்கில் பிரமோத்குமாரை விடுவிப்பது குறித்து மனு அளிக்கப்பட்ட நிலையில் இம்மனு மீதான விசாரணை வருகின்ற அக்டோபர் 31-ம் தேதி நடைபெறும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் நவம்பர் 4-ம் தேதி அன்று ஐ.ஜி. பிரமோத்குமார்,அப்போதைய சிபிசிஐடி டிஎஸ்பி ராஜேந்திரன், காவல் ஆய்வாளர் மோகன்ராஜ், திருநெல்வேலியைச் சேர்ந்த ஜான் பிரபாகரன்,திருப்பூரைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகியோர் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *