தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட எட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை இன்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி (பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரக வளாக கூட்ட அரங்கில் தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் வெளியிட்டார். அக்டோபர் 2023 வரை பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் பெயர் சேர்க்கப்பட்டு, உரிய திருத்தங்கள் மற்றும் நீக்கம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்களார் பட்டியலின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் 974896 ஆண் வாக்காளர்களும், 10,25,988 பெண் வாக்காளர்களும், 156 இதர பாலினத்தவர்கள் உட்பட மொத்தம் வாக்காளர்கள் 2001040 உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பொது மக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் பிழையின்றி இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். வரும் 04.11.2023 (சனிக்கிழமை), 05.11.2023 (ஞாயிற்றுக் கிழமை) மற்றும் 18.11.2023 (சனிக்கிழமை), 19.11.2023 (ஞாயிற்றுக் கிழமை) ஆகிய நான்கு நாட்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது மற்றும் திருத்தம் மேற்கொள்ள ஏதுவாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
நிகழ்ச்சியில் திமுக சார்பில் பட்டுக்கோட்டை எம்எல்ஏ அண்ணாதுரை தஞ்சை மத்திய மாவட்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி, ஆற்காடு புண்ணியமூர்த்தி, அதிமுக சார்பில் மாநகர செயலாளர் சரவணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், மாநகர துணை செயலாளர் முத்துக்குமார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.