சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முன் கேட்டில் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக ரவுடி கருக்கா வினோத் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அன்றைய தினம் ஆளுநர் மாளிகையை ஒட்டிய நடை பாதையில் நின்று கொண்டு ரவுடி கருக்கா வினோத் 2 பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளார். அந்த குண்டுகள் சாலையின் நடுவில் விழுந்து வெடித்தது. பின்னர் மேலும் 2 பெட்ரோல் குண்டுகளை வீச முயன்றான். இதைப் பார்த்த போலீசார் கருக்கா வினோத்தை பிடித்தனர். மேலும் அவனிடம் இருந்த 2 பெட்ரோல் குண்டுகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ரவுடி கருக்கா வினோத் இரு நாட்களுக்கு முன்னர்தான் ஜாமீனில் வெளியில் வந்தவர் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி நீட் பிரச்னைக்காக பாஜ மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தின் மீது ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசி சிக்கியவர் என்றும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறையில் இருந்த போது வினோத்தை யாரும் ஜாமீனில் எடுக்கவில்லை. பாஜ அலுவலகத்தின் மீது வெடிகுண்டு வீசிய வழக்கில், திருவாரூர் மாவட்ட பாஜ வக்கீல் அணி செயலாளர் முத்தமிழ்செல்வக்குமார், செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து ஜாமீனில் கருக்கா வினோத்தை வெளியில் எடுத்துள்ளார். அந்த வழக்கில் ஜாமீனில் வெளியில் வந்த 2வது நாளில் ஆளுநர் மாளிகை மீது வெடிகுண்டுகளை அவன் வீசியுள்ளான். இதனால், கருக்கா வினோத் ஜாமீனில் வெளியில் வந்த விவகாரத்தில் பல உண்மைகள் மறைந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் அவனை காவலில் எடுத்து விசாரணை நடத்தினால், அவனுக்கு தூண்டுதலாக யாராவது தலைவர்கள் உள்ளார்களா என்பது தெரியவரும் என்று கூறப்படுகிறது.