தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி சாலையை சேர்ந்தவர் 36 வயது இளம்பெண். இவரது கணவர் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அந்த இளம் பெண் தனது தாய் வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த, அக்.10ம் தேதி அந்த இளம் பெண்ணின் வாட்ஸ் அப்பிற்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் ஆன்லைன் வேலை, பகுதி நேரமாக வேலை செய்தால், தினமும் அதிகம் வருவாய் ஈட்டலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த மெசேஜை பார்த்த அந்த இளம்பெண் அதில் இருந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். எதிர்முனையில் பேசிய மர்மநபர் ஆன்லைன் பணி உள்ளது. அதற்கு மதிப்பீடு செய்து கொடுத்தால், குறிப்பிட்ட தொகை தரப்படும் என்று தெரிவித்துள்ளார். வீட்டிலிருந்தபடியே செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று அந்த மர்மநபர் கூறியதை நம்பிய அந்த பெண்ணும் அவர்கள் கொடுத்த டாஸ்க்கை முடித்துள்ளார்.
சில நாட்கள் கழித்து அந்த பெண்ணிடம் தொடர்பு கொண்ட பேசிய மர்மநபர், இன்னும் சில ‘டாஸ்க்’ செய்தால் கூடுதல் லாபம் பெற முடியும். அதற்கு முதலீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த பெண் தனது தம்பி வீடு கட்டுவதற்காக லோன் மூலம் வாங்கி வைத்திருந்த பணத்தை கேட்டு வாங்கியுள்ளார். பின்னர் அந்த மர்மநபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.27 லட்சத்து 27 ஆயிரம் வரை பல தவணைகளில் செலுத்தியுள்ளார்.
பணம் கொடுத்து பல நாட்கள் ஆகியும் அந்த மர்மநபரிடம் இருந்து எவ்வித தகவலும் வராததால் அவர்களையும் தொடர்பு கொள்ள அந்த இளம் பெண் முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த செல்போன் சுவிட்ஸ் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண், தஞ்சாவூர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், ஆன்லைனில் வேலைவாய்ப்பு, டாஸ்க் முடித்தால் கூடுதல் லாபம், முதலீட்டுக்கு இருமடங்கு பணம் கிடைக்கும் என்று கூறி அதிகளவில் மோசடிகள் நடக்கிறது. எனவே இதுபோன்று வரும் அழைப்புகளை நிராகரிக்க வேண்டும். எனவே இளைஞர்கள், பெண்கள் யாரும் இதுபோன்று வரும் அழைப்புகளை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்று தெரிவித்தனர்.