சுவாமிமலை தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு காத்திருப்பு போராட்டம் நடைப் பெற்று வருகிறது. சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகள் பெயரில் பெற்ற ரூ.300 கோடி வங்கி கடனைத் தீர்க்க வேண்டும். விவசாயிகளின் கரும்பு கிரயத்தில் பிடித்தம் செய்யப் பட்ட பயிர்க் கடன் தொகையை வங்கியில் செலுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் அறிவித்த கரும்பிற்கான முழுத் தொகை மற்றும் 5 ஏ பிரைஸ் முழுவதையும் வட்டியுடன் ஒரே தவணையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். வெட்டுக் கூலி, வாகன வாடகை முழுவதையும் வட்டியுடன் ஒரே தவணையில் வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்து வரும் காத்திருப்பு போராட்டத்தில் 7 வது நாள் விவசாயிகள் கோவணம் அணிந்து மண்சட்டி ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர். 8 வது நாளான நேற்று முன் தினம் கோரிக்கைகளை வலியுறுத்தி எருமை மாட்டிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். தண்டோரா எச்சரிக்கை போராட்டம் நடத்தினர். இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.