சென்னை திருவல்லிக்கேணி டிபி கோவில் தெருவை சேர்ந்தவர் கஸ்தூரி ரங்கன். இவர் நேற்று இரவு அந்த பகுதி வழியாக சாலையில் சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த ஒரு மாடு அவரை முட்டி தூக்கி வீசியுள்ளது. இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஐஸ்ஹவுஸ் போலீசார் மாட்டின் உரிமையாளர் யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். ஏற்கெனவே செல்வி என்ற பெண் மீது மாடு முட்டி இழுத்து சென்ற சம்பவம் நிகழ்ந்த நிலையில், திருவல்லிக்கேணி பகுதியில் மீண்டும் சுந்தரம் என்பவரை மாடு முட்டியுள்ளது. தற்போது முதியவர் கஸ்தூரி ரங்கனும் பாதிக்கப்பட்டுள்ளார். இத்தொடர் தாக்குதல்கள் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.