ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு தீவிர உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தகவல்கள் பரவியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அதிபர் புதின் உடல்நலக் குறைவுக்கு ஆளானதுடன், தரையில் கிடக்கிறார் என்றும், சுற்றுமுற்றும் பார்த்தபடி காணப்பட்டார் என்றும் தகவல்கள் வெளியானது. இதுதொடர்பாக அதிபர் புதினின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், ரஷிய அதிபர் புதினின் உடல்நலம் பற்றி மற்றொரு புரளி எழுந்துள்ளது. அவர் நன்றாகவே இருக்கிறார் என தெரிவித்தார். கடந்த காலங்களிலும் இதுபோன்ற புரளிகள் வெளிவந்தன. புதினுக்கு பார்கின்சன் என்ற மறதிநோய் ஏற்பட்டுள்ளது உள்பட பல்வேறு யூகங்கள் வெளியிடப்பட்டன. ஆனால் அவை அனைத்தும் உண்மையல்ல, வெறும் வதந்திகள் என விளக்கம் அளிக்கப்பட்டது. அதிபர் புதின் கடந்த வாரம் சீனாவில் நடந்த சர்வதேச ஒத்துழைப்புக்கான சாலை மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.