தமிழகத்தில் தொடர் விடுமுறை, பண்டிகை காலம் ஆகியவற்றையொட்டி ஆம்னி பஸ்களில் கட்டணம் திடீரென அதிகரிக்கப்பட்டது. இது குறித்து அரசுக்கு புகார்கள் வந்தது. இதையொட்டி ஆம்னி பஸ்களை அதிகாரிகள் சோதனையிட்டதில் முறையான ஆவணம் இல்லாதது உள்பட பல்வேறு குற்றச்சாட்டின் பேரில் 120 பஸ்கள் பிடித்து வைக்கப்பட்டு உள்ளன. இந்த பஸ்களில் முறையான ஆவணங்கள் வைத்திருந்தும் சில பஸ்களை பிடித்து வைத்துள்ளதாகவும், இதனால் பஸ்களை விடுவிக்காவிட்டால் இன்று மாலை 6 மணி முதல் பஸ்களை இயக்க மாட்டோம் என்றும் ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆம்னி பஸ் சங்க தலைவர்களுடன் போனில் பேச்சுவர்த்தை நடத்தினார். போக்குவரத்து கழக அதிகாரிகளை சந்தித்து பேசி போராட்டத்தை கைவிடும்படி அவர்களிடம் எடுத்துக் கூறினார். அதன் பேரில் போக்குவரத்து துறை அதிகாரி சண்முகசுந்தரத்தைச் சந்தித்து ஆம்னி பஸ் சங்கத்தினர் பேசினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் ஆம்னி பஸ்கள் வழக்கம் போல இயக்கப்படும். போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவித்தனர்.
இதற்கிடையே ஆம்னி பஸ்களில் மற்றொரு சங்கமான தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க செயலாளர் மாறன் கூறுகையில், “ஆம்னி பஸ்கள் அனைத்தும் இயங்கும். பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம்” என்று கூறினார்.