தமிழ் நாடு நீர் வள நில வள திட்டத்தின் கீழ் திருவையாறு வட்டாரம் மரூர் கிராமத்தில் விவசாயிகள் வயல் வெளி பள்ளி நடைப் பெற்றது. தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா தாளடி நெற்பயிர் கதிர் வெளிவரும் தருணத்திலும், கண்ணாடி இலை பருவத்திலும் உள்ளன. பயிரின் நடவு முதல் அறுவடை வரை வளர்ச்சி நிலைகளை கண்காணித்து முறையான நீர் மேலாண்மை, களை கட்டுப்பாடு முறைகள், இயற்கை எதிரி பூச்சிகளை பாதுகாத்தல், அதிக விஷமுள்ள பூச்சி மருந்துகளை பயன்படுத்தாமல் பூச்சி நோய் மேலாண்மைகளை ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்ளுதல் ஆகியவற்றை விவசாயிகள் தங்கள் வயல்களில் தாங்களே மேற்கொண்டு அனுபவபூர்வமாக உணர்ந்திட ஒரு வாய்ப்பாக இந்த வயல்வெளி பள்ளிகள் நடத்தப்படுகின்றன. நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகள் ஆகியவற்றை விவசாயிகள் தாங்களே கண்டறிந்து உணர்ந்து கொள்ளவும், அவற்றை கட்டுப்படுத்தவும் விவசாயிகள் அறிந்து கொள்ள இந்த பள்ளி பயன் படுகிறது. வயல் வெளி பள்ளிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி இயக்குநர் பெறுப்பு சுஜாதா, வேளாண்மை உதவி அலுவலர் கவிதா, வேளாண் அலுவலர் சினேகா, அட்மா மேலாளர் ஜெயபிரபா ஆகியோர் செய்திருந்தனர்.