தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 வது சதய விழா இன்று காலை மங்கல இசை யுடன் தொடங்கியது. மாமன்னன் ராஜராஜ சோழன் முடி சூடிய திருநாள் அவர் பிறந்த நட்சத்திரமான ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாக கொண்டாடப்படுகிறது. இதன்படி நடப்பாண்டு மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா இன்று தொடங்கியது.
விழாவை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்தார். சதய விழா குழு தலைவர் து.செல்வம் வரவேற்றார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், அரண்மனை தேவஸ்தான பரம்பரை
அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் தொடக்க உரையாற்றினார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மாலையில் நாத சங்கமம், திருமுறை இசை ஆகியவற்றைத் தொடர்ந்து பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டிய சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. மேலும் இரவு 7 மணிக்கு இசை நிகழ்ச்சி நடக்கிறது. சதய விழா நாளான நாளை காலை 7.20 மணிக்கு மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தல், 8 மணிக்கு திருமுறைத் திருவீதி உலா, காலை 9.10 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் 1.40 மணிக்கு பெருந்தீப வழிபாடு, மங்கள இசை, நடன நிகழ்ச்சி, தேவார இன்னிசை, மாலை 4 மணிக்கு நாட்டியாஞ்சலி, நாத சங்கமம் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. மாமன்னன் ராஜராஜ சோழன் சதயவிழாவை ஒட்டி நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.