திருச்சி அருகே உள்ளது குழுமணி. இந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாட்டமாக நள்ளிரவு 12 மணிக்கு தெருவில் கேக்வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வண்ணம் சத்தம் போட்டு உள்ளனர். இதற்கு இன்னொரு தரப்பை சேர்ந்தவர்கள், இங்கு வந்து ஏன் சத்தம் போடுகிறீர்கள் என கண்டித்து உள்ளனர்.
இதனால் புத்தாண்டு கொண்டாடியவர்கள் ஜீயபுரம் போலீசில் புகார் செய்தனர். அதில் தங்களை சிலர் தவறாக பேசி தாக்க முயன்றதாக கூறி இருந்தனர். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தங்கள் மீது வழக்கு பதிவு செய்ததை கண்டிக்கும் வகையில் அந்த தரப்பினர் இன்று குழுமணி கடைவீதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட 100க்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் ஜீயபுரம் டிஎஸ்பி பாரதிதாசன் தலைமையில் போலீசார் அங்கு வந்து மறியல் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தி இருந்தால் அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என டிஎஸ்பி உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.