திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பகுதியில் உள்ள அப்பாயி நகைக்கடையில் நேற்று இரவு மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வழக்கம்போல் நேற்று இரவு ஊழியர்கள் வியபாரத்தை முடித்துவிட்டு வெளியே மின் விளக்குகளை எறிய விட்டு கடையை பூட்டி சென்றனர்.
நள்ளிரவில் கடைக்கு வந்த மர்ம நபர்கள் லைட்டை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் லைட் அணையாததால் அதன் மீது கருப்பு நிற பெயிண்டை தெளித்து அந்த பகுதியை இருட்டாக்கி விட்டனர். அதனை தொடர்ந்து அந்த நபர்கள் கடையின் ஷட்டரை வெல்டிங்கால் துளையிட்டனர்.
துளையிட்ட நிலையிலும் கொள்ளையர்கள் அந்த நகைக்கடைக்குள் நுழையாமல் அப்படியே தப்பி சென்றுவிட்டனர். காலையில் கடையை திறக்க வந்த ஊழியர்கள் ஷட்டர் துளையிடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கடை உரிமையாளர் கார்த்திக்கு தகவல் தெரிவித்தனர். பெரம்பலூரில் உள்ள உரிமையாளர் கார்த்தி உப்பிலியபுரம் போலீசுக்கு போன் மூலம் தகவல் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த பகுதியில் தொடர்ந்து நடைபெறும் கொள்ளை சம்பவத்தால் இப்பகுதியில் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த 1 வாரத்திற்கு முன்பு மூதாட்டியிடம் 8 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது குறிப்பிடத்தக்கது.
அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இருந்ததால் கொள்ளையர்கள் கைவரிசை காட்டாமல் தப்பி இருக்கலாம் எனவும், இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் தப்பியதாகவும் தெரியவந்துள்ளது.