திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக பதவியேற்ற எம். சத்தியபிரியா இன்று மக்கள் குறைகேட்டார். தமிழக முதல்வரிடம் பொதுமக்கள் கொடுத்த மனுக்களுக்கும். கமிஷனரிடம் வழங்கப்பட்ட மனுக்களுக்கும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெற்ற மனுக்களுக்கும் உடனடியாக தீர்வு கிடைத்திட வேண்டி சிறப்பு முகாம் (பெட்டிசன் மேளா) இன்று திருச்சி மாநகர கமிஷனர் அலுவலகத்தல் நடைபெற்றது.
இதில் திருச்சி மாநகர துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட அனைத்து இன்ஸ்பெக்டர்களும் பங்கேற்றனர்.
திருச்சி கண்டோன்மெண்ட், கே.கே.நகர், பொன்மலை, ஸ்ரீரங்கம், காந்திமார்க்கெட் மற்றும் தில்லைநகர் ஆகிய காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்து சிறப்பு பெட்டிசன் மேளாவிற்கு வந்த பொதுமக்களிடமிருந்து குறைகள் தீர்க்கப்படாத 42 மனுக்கள் பெறப்பட்டு, அதில் ஏற்கனவே விசாரித்த 4 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மீதம் உள்ள மனுக்களை காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு ஆகியோரிடம் வழங்கி, துரிதமாக விசாரணை செய்து. மனுக்களை விரைந்து முடிக்க காவல் கமிஷனர் அறிவுறுத்தினார்.
இதேபோன்று திருச்சி மாநகர காவல்துறை சார்பாக தமிழக முதலமைச்சர் அவர்களின் அலுவக துறைசார்ந்த மனுக்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெறப்படும் புகார்மனுக்கள் மீது துரிதமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர கமிஷனர் சத்தியபிரியா தெரிவித்துள்ளார்.