கடந்த சில நாட்களாகவே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி மீன்பிடி உபகரணப் பொருட்களை பறித்து சென்று அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையில் இருந்து ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான படகில் அவருடன் மதியழகன்,
நெடுஞ்செழியன் ஆகிய 3பேரும் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடல் கொள்ளையர்கள் தமிழக எல்லைக்குள்
அத்துமீறி நுழைந்துள்ளனர்.
தொடர்ந்து தமிழக மீனவர்களை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ஜிபிஎஸ் கருவி, செல்போன், பேட்டரி,பிடித்த மீன்கள் உள்ளிட்ட 50 ஆயிரம் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனர்.
இந்நிலையில் கரை திரும்பிய மீனவர்களிடம் இலங்கை கடற் கொள்ளையர்கள் எத்தனை நபர் வந்தார்கள், தாக்குதல் நடத்தினார்களா?
காயம் ஏதும் ஏற்பட்டுள்ளதா?
என வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மீனவர்கள் மூவருக்கும் காயம் ஏற்படாத நிலையில் அவர்கள் அவரவர் வீட்டிற்கு திரும்பினர். இலங்கை கடல் கொள்ளையர்களால் தொடர்ந்து தமிழக மீனவர்களுக்கு அச்சுறுத்தல் இருந்து வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் தலையிட்டு உடனடியாக இதற்கு ஒரு தீர்வை பெற்று தர வேண்டும் என்பதே மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.