Skip to content
Home » அரசு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கும் நிகழ்வு …

அரசு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கும் நிகழ்வு …

அரசு உயர்நிலைப்பள்ளியில் தொடக்க விழா நிகழ்வு அசூரில் நடைபெற்றது.

உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கும் நிகழ்வு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் மேலும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளுக்கு திருக்குறள் நூல்கள் மாணவர்களுக்கு கட்டணம் இல்லாமல் வழங்கி வருகிறது.

இவ்வாண்டு மாவட்டத்திற்கு 2000 நூல்கள் வீதம் இயன்றவரை அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க முடிவெடுத்துள்ளது . இந்த திட்டமானது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு தற்பொழுது மாவட்ட வாரியாக உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

உலக இலக்கியங்கள்‌ அனைத்திலும்‌ சிறந்ததும்‌ , மனித குலம்‌ அனைத்திற்குமாக தோற்றுவிக்கப்பட்ட தன்னிகரற்ற படைப்பு திருக்குறள்‌ ஆகும். அத்தகைய சிறப்புமிக்க பொதுமறை எனப் போற்றப்படும்‌ அறக்கருத்துக்களடங்கிய திருக்குறட்பாக்களின்‌ மாண்பை வருங்கால மாணவர்கள்‌ இளம்‌ வயதிலேயே முற்றோதல்‌ செய்தால்‌, அவை பசுமரத்தாணி போல்‌ பதிந்து, நெஞ்சில்‌ நிலைத்து அவர்களது வாழ்க்கைக்கு வழிகாட்டும்‌.

தமிழ்நாடு அரசு திருக்குறள்‌ முற்றோதல்‌ திட்டம்‌

தாம்‌ பெறுகின்ற கல்வியறிவோடு, அறநெறி ஆற்றலை தன்னகத்தே பெற்று நல்லொழுக்கம்‌ மிக்கவர்களாக மாணவர்களை உருவாக்கிட வேண்டும்‌ என்ற உயரிய நோக்கில்‌ தமிழ்நாடு அரசு திருக்குறள்‌ முற்றோதல்‌ திட்டத்தை ஆண்டுதோறும்‌ செயற்படுத்தி வருகிறது. எனவே, திருக்குறள்‌ முற்றோதல்‌ செய்யும்‌ மாணவச்‌ செல்வங்களுக்கு பரிசு வழங்கிப்‌ பாராட்டுவது, மாணவர்களின்‌ நல்வாழ்வுக்குத்‌ துணை நிற்பதாகவும்‌, திருக்குறள்‌ நெறி வழிவகுப்பதாகவும்‌ அமையும்‌.

1330 அருங்குறளையும் முழுமையாக‌ ஒப்புவிக்கும்‌ மாணவர்கள்‌ அனைவருக்கும் திருக்குறள்‌ முற்றோதல் பாராட்டுப்‌ பரிசு தலா ரூ. 15000 வீதம்‌ பரிசுத்தொகை, பாராட்டுச்‌ சான்றிதழ்‌ வழங்கி ஆண்டுதோறும்‌ சிறப்பிக்கப் பெறுகின்றனர்‌.

தற்பொழுது பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே ஒரு மாணவி மட்டுமே இப் போட்டியில் பங்குபெற்று 15 ஆயிரம் ரூபாய் பரிசுப் பணமும் பாராட்டு சான்றிதழும் பெற்று உள்ளார். இந்தப் பாராட்டு சான்றிதழானது தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு. க. ஸ்டாலின் அவர்களால் கையொப்பமிட்ட சான்றிதழ் ஆகும். மாவட்ட வாரியாக தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களால் சிறப்பிக்கப்படுவர்.

எனவே தமிழ் வளர்ச்சித் துறை மூலமாக நடத்தப்படும் இந்த திருக்குறள் முற்றோதல் நிகழ்வில் மாணவர்கள் பங்கு பெற்று சிறப்பு எய்த வேண்டும் என்ற நோக்கில் திருக்குறள் நூல்கள் வழங்கும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம்,குன்னம் வட்டம்,அசூர் அரசு உயர்நிலைப்பள்ளியில், பள்ளித் தலைமை ஆசிரியர் ப.அன்பழகன் தலைமையில், வேப்பூர் ஒன்றிய பெருந்தலைவர் பிரபா செல்லப்பிள்ளை அவர்களால் திருக்குற நூல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது.

உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பாக அதன் பொறுப்பாளர் இரமேஷ் கருப்பையா திருக்குறள் குறித்த சிறப்புகளை மாணவர்களிடையே உரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *