தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக, இந்திய வானிலை மையம் அறிவித்திருக்கிறது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே, ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், சென்னை வானிலை மையத்தில், தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். வடகிழக்கு பருவமழை: அதில், “இந்த ஆண்டுக்கான தென் மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் நிறைவடைகிறது. இப்போது கிழக்கு மற்றும் வடகிழக்கு திசைகளில் இருந்து, தென்னிந்தியப் பகுதிகளில் காற்று வீசக்கூடிய நிலையில், வடகிழக்குப் பருவமழை அடுத்து வரும் மூன்று தினங்களில் தென்னிந்தியப் பகுதிகளில் துவங்கும். கடந்த ஜூன் முதல் பெய்து வந்த, தென் மேற்கு பருவமழை, வியாழக்கிழமையுடன் நிறைவு பெற்றது. கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் இருந்து, காற்று வீசுவதுஅதிகரித்துள்ளது. இதனால், தென் மாநிலங்களில், வடகிழக்கு பருவமழை பெய்யும். அரபிக்கடல் பகுதியில், காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. மேலும், வங்கக்கடல் பகுதியில் இன்னொரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 21-ம் தேதியை ஒட்டி துவங்கக்கூடும்.
காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்த 2 காற்றழுத்தத் தாழ்வு பகுதிகளின் காரணமாக, துவக்க நிலையில் வடகிழக்குப் பருவமழை தென்னிந்தியபகுதிகளில் வலு குறைந்து காணப்படும். ,அதனால் அரபிக் கடல் பகுதியில், தெற்கு மற்றும் மத்திய அரபிக்கடலுக்கு வரும் 23-ம் தேதி வரை செல்ல வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 23-ம் தேதி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என்றும் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது. மழை இருக்கு: அதுமட்டுமல்ல, இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்திய வானிலை மையத்தின் இந்த அறிவிப்பானது, தமிழக மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.