திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த கார்த்திகேயன் திருச்சி மத்திய மண்டல ஐஜியாக மாற்றப்பட்டார். அதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் டிஐஜியாக இருந்த சத்தியபிரியா, பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
திருச்சி போலீஸ் ஆணையரகம் ஏற்படுத்தப்பட்டு 25 வருடம் ஆன நிலையில், இதுவரை 31 ஆணையர்கள் பதவி வகித்துள்ளனர். இன்று முதன் முதலாக பெண் கமிஷனராக சத்தியபிரியா திருச்சியில் பதவி ஏற்றார். சத்தியபிரியா சில வருடங்களுக்கு முன் திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கமிஷனராக பதவியேற்ற சத்திய பிரியா கூறியதாவது: திருச்சி மாநகரின் முதல் பெண் கமிஷனராக பதவியேற்றதில் மகிழ்ச்சி. ஏற்கனவே இங்கு பணியாற்றிய அனுபவம் உள்ளதால் திருச்சியை பற்றி ஓரளவுக்கு தெரியும். போலீஸ்-பொதுமக்கள் நட்புறவை வளர்க்கும் வகையில் சிறப்பாகபணியாற்ற விரும்புகிறேன். மாநகரத்தில் கஞ்சா புழக்கத்தை முழுமையாக ஒழிக்கவும் ரவுடியிசத்தை கட்டுப்படுத்தவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா பான் மசாலா உள்ளிட்ட போதை வஸ்துகளை ஒழிப்பதற்கு பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும். சட்டம் ஒழுங்கு தொடர்பாக பொதுமக்கள் தங்கள் குறைகளை நேரில் தெரிவிக்கலாம். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.