அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பஸ் ஸ்டாண்டில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் 2 ஆட்டோ ஸ்டாண்ட் அமைத்து கடந்த 30 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு மற்றொரு சமூகத்தை சேர்ந்த சிலர் ஏற்கனவே செயல்பட்டு வந்த ஆட்டோ ஸ்டாண்டிற்கு முன்பாக அவர்கள் சமூகத்தைச் சேர்ந்த ஆட்டோ ஸ்டாண்ட் பெயர் பலகை வைத்து ஆட்டோவை நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் இன்று ஆட்டோ ஸ்டாண்டிற்கு வந்த ஒரு சமூகத்தினர் மற்றொரு சமூகத்தினரின் பெயர் பலகை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து இரு சமூகத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களும் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர்
சண்முகசுந்தரம் ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் மூர்த்தி தலைமையில் இரு சமூக ஆட்டோ ஓட்டுநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுது இரு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் ஒரே இடத்தில் ஆட்டோ ஸ்டான்டு அமைத்தால், தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். எனவே ஆட்டோ ஸ்டாண்ட் அமைப்பதாக தற்போது பேனர் வைத்துள்ள சமூகத்தினரை மற்றொரு இடத்தில் ஆட்டோ ஸ்டாண்ட் அமைத்துக் கொள்ள உத்தரவிட வேண்டும் என ஒரு சமூகத்தினர் வலியுறுத்தினர். இதனையடுத்து இரு சமூகத்தினரும் பேருந்து நிலையத்தில் வேறு வேறு இடங்களில் ஆட்டோ ஸ்டாண்ட் வைத்துக் கொள்ளவும். இது குறித்து பின்னர் பேசி முடிவு செய்து கொள்ளலாம் என கூறியதையடுத்து இரு சமூகத்தினரும் கலைந்து சென்றனர்.