ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்பார்கள். இந்த மாதத்தில் இரவு நேரமும், பகல் நேரமும் சமமாக இருப்பதால், இதற்கு ‘துலா (தராசு) மாதம் என்று பெயர். ‘ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியில் நீராடுவது புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். துலா மாதத்தில் சூரிய உதயத்திற்கு முன் காவிரியில் மும்மூர்த்திகளும், முப்பது முக்கோடி தேவர்களும், 68 ஆயிரம் ரிஷிகளும், முனிவர்களும், சித்தர்களும் நீராடுவதாக சாஸ்திரம் குறிப்பிடுகிறது.ஐப்பசி மாதம் முதல் நாளில் நீராடுவதை துலா முதல் முழுக்கு என்றும் கடைசி நாளில் நீராடுவதை கடைமுழுக்கு என்று கூறுவார்கள்.
முதல் முழுக்கு திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை காவிரியில் சிறப்பாக கொண்டாடப்படும். இன்று ஐப்பசி மாதம் 1ம் தேதி என்பதால் அதிகாலை திருப்பராய்த்துறை பசும்பொன் மயிலாம்பிகை உடனுறை தாருகாவனேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். அவரைத்தொடர்ந்து சோமாஸ்கந்தர் தனி ரிஷப வாகனத்தில் வந்தார். வழி முழுவதும் பக்தர்கள் சுவாமிகளை தரிசித்தனர்.அவர்கள் காவிரி கரையை அடைந்ததும், அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் அஸ்திரதேவர் தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காவிரியில் நீராடினர். இதில் எராளமான பெண்களும் பங்கேற்று துலா ஸ்நானம் செய்தனர். இதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் நேற்று நள்ளிரவே திருப்பராய்த்துறை வந்து காத்திருந்தனர். பக்தர்கள் பாதுகாப்பு பணியில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
வழக்கமாக ஐப்பசி முதல் தேதியில் காவிரியில் அதிக அளவு தண்ணீர் செல்லும். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் குறைவாக இருப்பதால், அணை மூடப்பட்டு இருந்தாலும் பக்தர்கள் நீராடுவதற்காக காவிரியில் சில தினங்களுக்கு முன்னரே தண்ணீர் திறக்கப்பட்டதால் பக்தர்கள் வசதியாக நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். இதே போன்று மயிலாடுதுறை துலா கட்ட காவிரியிலும் துலா முழுக்கு இன்று விமரிசையாக நடைபெற்றது.. இங்கு ஐப்பசி கடைசி நாளில் நடைபெறும் கடைமுழுக்கு சிறப்பு வாய்ந்தது.