உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 15-வது போட்டியில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியை 38 ரன்களில் வீழ்த்தி அதிர்ச்சியை கொடுத்துள்ளது நெதர்லாந்து அணி. கடந்த 15-ம் தேதி இங்கிலாந்து அணியை ஆப்கன் அணி தோற்கடித்த நிலையில் இது 2வது பெரிய வெற்றியாகும். தரம்சாலாவில் நடைபெற்ற இந்தப் போட்டி மழை காரணமாக தலா 43 ஓவராக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங் தேர்வு செய்தது. 43 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்தது நெதர்லாந்து. அந்த அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 69 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார். 10 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் அவரது இன்னிங்ஸில் அடங்கும். 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்கா களம் இறங்கியது. கேப்டன் பவுமா, டிகாக், வான்டர் டூசன், மார்க்ரம் ஆகிய 4 விக்கெட்டுகள் 21 பந்துகளுக்குள் விழ ஒரு கட்டத்தில் 44 ரன்களுக்கு 4 என்கிற பரிதாப நிலையில் தென் ஆப்பிரிக்கா இருந்தது. பின்னர் கிளாஸன் மற்றும் மில்லர் இணைந்து குட்டி பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருந்தும் கிளாஸன், 28 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து மார்கோ யான்சென், மில்லர் (52 பந்துகளில் 43 ரன்கள்), ஜெரால்டு கோட்ஸி (22 ரன்கள்), ரபாடா, கேஷவ் மகாராஜ் ஆகியோர் ஆட்டமிழந்தனர். 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்தது தென் ஆப்பிரிக்கா தோல்வியை தழுவியது. ஏற்கனவே நெதர்லாந்து அணி 2009-ம் ஆண்டு டி20 கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்தையும், கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் 13 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அதிர்ச்சியை கொடுத்தது குறிப்பிடதக்கது..