கரூர் மாவட்டம், நொய்யல் அருகே கவுண்டன் புதூர் பகுதி சேர்ந்தவர் ராமசாமி ( 63). விவசாயி. இவரது தோட்டம் செல்வநகர் பகுதியில் உள்ளது. அவரது தோட்டத்தின் அருகே இருந்த தென்னை மரத்தில் ஆயிரக்கணக்கான மலைத்தேனீக்கள் கூடு கட்டி இருந்தது. இந்நிலையில் மலைத்தேனீக்கள் அந்த வழியாக சென்றவர்களை அவ்வப்போது தீண்டி அச்சுறுத்தி வந்தது. இந்நிலையில் ராமசாமி தண்ணீர் பாய்ச்சுவதற்காக தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் பறந்து சுற்றி திரிந்த மலை தேனீக்கள் ராமசாமியை தீண்டியது .இதில் வலி தாங்க முடியாமல் ராமசாமி அருகில் இருந்த கிணற்று தண்ணீருக்குள் குதித்துள்ளார். பின்னர் நீண்ட நேரம் தண்ணீருக்குள் மூழ்கிஇருந்து விட்டு மூச்சு தாக்குப்பிடிக்க முடியாமல் மீண்டும் கிணற்றுக்கு மேலே வந்தபோது அங்கு சுற்றி இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மலை தேனீக்கள் ராமசாமியை சுற்றி தீண்டியுள்ளது. இதில் ராமசாமி மயக்கம் அடைந்துள்ளார். அதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ராமசாமியை வேலாயுதம்பாளையத்தில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் செல்வ நகர் பகுதியில் தென்னை மரத்தில் கூடு கட்டி உள்ள ஆயிரக்கணக்கான மலை தேனீக்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்தப் பகுதியில் மலைதேனீக்கள் தீண்டியதில் விவசாயி ஒருவர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.