ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க.வுடன் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைக்கும் என அந்த மாநிலத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவுக்கு காங்கிரஸ் கட்சி கூட்டணியில் சேர அழைப்பு விடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவர் சிந்தாமோகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:
சந்திரபாபு நாயுடு மிகவும் நல்ல மனிதர். சகிப்புத்தன்மையின் எல்லைக்கு அப்பால் முன்னாள் முதல் மந்திரியான அவரை தொந்தரவு செய்வது ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் அநியாயமாகும். சந்திரபாபு நாயுடுவை உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும். கோர்ட்டுகளில் அரசியல் தலையீடு உள்ளது. ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் சேர வேண்டும். அவ்வாறு சேர்ந்தால் அவர்களது அரசியல் உறவு பலனளிக்கும். தற்போது ஆந்திராவில் காங்கிரஸ் வாக்கு வங்கி 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் 75 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும். ஓபிசி பிரிவினருக்கு உடனடியாக அரசியல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். கல்வி வேலைவாய்ப்பில் ஓபிசியினருக்கு 27 %செய்த இட ஒதுக்கீடு வழங்குவதற்காக 2005-ம் ஆண்டு அரசியலமைப்பு திருத்தத்தை காங்கிரஸ் நிறைவேற்றி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.