நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி திரையிடப்படுகிறது. இந்த படத்திற்கு சிறப்பு காட்சி நடத்த அனுமதி கேட்டு படத்தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ அரசிடம் முறையிட்டது. இதைத்தொடர்ந்து உள்துறை செயலாளர் அமுதா ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை தினமும் 5 காட்சிகள் நடத்த அனுமதி அளித்தார்.
அத்துடன் முதல் காட்சியை காலை 9 மணிக்கு தொடங்கி விட வேண்டும். கடைசி காட்சியை மறுநாள் அதிகாலை 1.30 மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும் என்றும், இதை அனைத்து மாவட்ட கலெக்டர்கள், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் கண்காணிக்க வேண்டும். இதற்காக குழு அமைக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.
இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் சினிமா தியேட்டர்களில் லியோ படத்திற்காக ஆன்லைனில் முன்பதிவு தொடங்கியது. இதற்காக புக் மை ஷோ என்ற ஆப் மூலம் முன்பதிவு நடந்து வருகிறது.
திருச்சியில் எல்.ஏ. சோனா மீனா, எல்ஏ மாரிஸ் ஆகிய மல்டி ப்ளக்ஸ் தியேட்டர்களிலும் புக்கிங் செய்யப்பட்டு வருகிறது. இதில் 19ம் தேதி காலை 9 மணிக்கு முதல் காட்சிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசி காட்சி இரவு 11. 20 முதல் 11.30 மணி வரை மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. கடைசியாக 11.30மணிக்கு திரையிடப்படும் லியோ படம் முடிவடைவதற்கு மறுநாள் அதிகாலை 2 மணியை கடந்து விடும்.
அதாவது லியோ படம் 2மணி நேரம் 19 நிமிடம் ஓடக்கூடிய படம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நள்ளிரவு 11.30 மணிக்கு திரையிட்டால் படம் முடிவடைய மறுநாள் அதிகாலை 2 மணி 9 நிமிடம் ஆகும். இதற்கிடையே இடைவேளை 15 நிமிடம் விடப்பட வேண்டும். அப்படியானால் 2 மணி 24 நிமிடங்கள் ஆகிவிடும்.
அரசாங்கும் அதிகாலை 1.30 மணிக்குள் 5 காட்சிகளையும் முடித்து விட வேண்டும் என கூறியுள்ள நிலையில் அரசு உத்தரவை மீறும் வகையில் திருச்சி தியேட்டர்கள் காட்சி நேரங்களை வகைப்படுத்தி உள்ளது.
அதே நேரத்தில் 21,22, 23, ஆகிய நாட்களில் காலையில் முதல் காட்சி 9 மணிக்கு முன்னதாக 8.20 மணிக்கே காட்சி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கடைசி காட்சி 11.30 மணிக்கு என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அப்படியானால் மேற்கண்ட 3 நாட்களிலும் காட்சி தொடக்கமும், முடிவும் அரசு உத்தரவை மீறும் வகையிலேயே உள்ளது.
அரசாங்கம் ஒரு உத்தரவுபிறப்பித்தால் அதை அனைவரும் செயல்படுத்த வேண்டும். ஆனால் தியேட்டர்காரர்கள் அரசு உத்தரவை மீறி படத்தை முன்னதாகவே தொடங்குவதும், லேட்டாக முடிப்பதுமாக அறிவித்து உள்ளனர்.
உள்துறை செயலாளர் அமுதா அனுப்பிய சுற்றறிக்கையின்படி பெரும்பாலான மாவட்ட கலெக்டர்கள், அதிகாலை 1.30 மணிக்குள் காட்சிகளை முடித்து விட வேண்டும் என தியேட்டர் அதிபர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் திருச்சியில் முன்னதாக ஆரம்பிப்போம், லேட்டாகத்தான் படத்தை முடிப்போம் என்று புக்கிங் மூலம் பிரகடனப்படுத்தியுள்ள திருச்சி தியேட்டர்கள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா, என விஜய் ரசிகர்கள் அல்லாத மற்ற ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறாா்கள்.