நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சூரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நாகஜோதி – தினேஷ் தம்பதியினர், பிறந்து ஒரு வாரமே ஆன தங்களது பெண் குழந்தைக்கு உடல்நிலை பாதிப்பு காரணமாக திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றும் அனுராதா என்பவர், லோகாம்பாள் என்பவர் மூலம் குழந்தையின் பெற்றோரிடம் 2 லட்ச ரூபாய் தருவதாக கூறி குழந்தையை விற்க வற்புறுத்தி உள்ளார். இதுகுறித்து நாகஜோதி – தினேஷ் தம்பதியினர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து வழக்குப்பதிவு
செய்த போலீசார், மருத்துவர் அனுராதா மற்றும் லோகாம்பாளிடம் விசாரணை மேற்கொண்டதில், இருவரும் இதுவரை 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளை விற்பனை செய்திருப்பதும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஆள் ஏற்பாடு செய்து கொடுத்திருப்பதும் தெரிய வந்தது.
மருத்துவர் அனுராதா தன்னிடம் கருக்கலைப்புக்காக வரும் பெண்களிடம் கருக்கலைப்பு செய்ய வேண்டாம் எனவும், குழந்தை பெற்று கொடுத்தால் அதனை விற்று தருவதாகவும் கூறி, மூளைச்சலவை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வகையில் இதுவரை 7 குழந்தைகளுக்கு மேல் இவர்கள் விற்பனை செய்துவந்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் 10க்கும் மேற்பட்டவர்கள் தொடர்பில் உள்ளதாகவும், தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.