திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தமிழகத்தில் பழனிமுருகன் கோவிலுக்கு அடுத்தப்படியாக பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவது சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குத்தான்.
இக்கோவிலுக்கு வெள்ளி, ஞாயிறு, செவ்வாய் போன்ற தினங்களிலும், அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களிலும் அம்மனை தரிசனம் செய்வதற்காகவும், நோய் நொடியில்லாத வாழ்க்கை அமையவும், செல்வ செழிப்போடு குடும்பம் விளங்கவும், வேண்டிக்கொண்டு திருச்சி மாவட்டம்
மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாத யாத்திரையாகவும், கார், வேன் போன்ற வாகனங்களிலும், சமயபுரம் வந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கம்.
இன்று புரட்டாசி மாத மகாளய அமாவாசை என்பதால் அதிகாலை முதலே பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. அவர்கள் கட்டண வரிசையிலும், பொது தரிசன வரிசையிலும் நீண்ட வரிசையில் நின்று அம்மனை பயபக்தியுடன் வணங்கினர். மேலும் நெய்தீபங்கள் ஏற்றியும், கோவிலின் நுழைவு வாயிலில் தீபம் ஏற்றி தேங்காய் உடைத்தும், ஏராளமான பெண்கள் வணங்கினர். சில பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு குழந்தையை கரும்பு தொட்டிலில் சுமந்து வந்தும், அக்னி சட்டி ஏந்தி வந்தும் அம்மனை வழிபட்டனர்.
பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து துறை சார்பில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்களின் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி, சங்கிலி பறிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய் தங்கம் மேற்பார்வையில் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஏராளமான போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.