மயிலாடுதுறை மாவட்டம், நடுக்கரை ஊராட்சி மேலப்பாதியை சேர்ந்தவர் சேகர் மகன் ஹரிஷ்(8). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 30ம் தேதி ஏதோ கடித்ததால் திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சேர்த்துள்ளனர். 31ஆம் தேதி வரை மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஹரிஷ் உடல்நிலை மோசமானதை அடுத்து அவரை திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி உள்ளனர். அவருக்கு பாம்பு கடித்து விஷம் உடல் ஏறி விட்டதாக கூறி டாக்டர்கள் அவரை 1ஆம் தேதி தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பரிந்துரை செய்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி 2ம்தேதி மாலை ஹரிஷ் இறந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் 3ஆம்தேதி பிரேத பரிசோதனை முடிந்து ஹரிஷ் உடலை வீட்டிற்கு கொண்டு செல்லாமல் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரி முன்பு கொண்டு வந்து வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சரியாக சிகிச்சை அளிக்காமல் விஷக்கடியை கண்டுபிடிக்காமல் அலட்சியமாக சிகிச்சை அளித்ததாலே சிறுவன் இருந்ததாக கூறி சம்பந்தப்பட்ட டாக்டரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் மாவட்ட நிர்வாகம் இதற்கு உறிய பதில் அளிக்க வேண்டும் என்று கூறி உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.